இந்திய நாட்டு ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போர் விமானியான அபிலாஷா பராக் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் வசிக்கும் அபிலாஷா பராக் என்ற 26 வயது இளம்பெண் நம் நாட்டு ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி, என்னும் பெருமையை பெற்றிருக்கிறார். இவரின் தந்தை, இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர்.
1987-ஆம் வருடத்தில் ஆபரேஷன் மேக்தூத் சமயத்தில், அமர் போஸ்ட்டிலிருந்து பானா டாப் போஸ்ட் வரை சோதனை குழுவை வழிநடத்தி சென்ற அபிலாஷாவின் தந்தைக்கு, மோசமான வானிலையால், பெருமூளையில் ஒடிமா பாதிப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில், இந்திய ராணுவ விமானப்படை விமானம், உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. எனவே, இந்திய ராணுவப்படைக்கு தான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறும் அபிலாஷா, இன்று கடும் சவால்களை தாண்டி தன் கடமையை தொடங்க தயாராகியுள்ளார்.
அபிலாஷா, கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்திய விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். அதே வருடத்தில், இந்திய ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராணுவ ஏர் டிஃபென்ஸ் யங் ஆபீசர்ஸ் கல்வியில், ‘A’ தரத்தையும், ஏர் டிராஃபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் கல்வியில் 75.70% பெற்று, Part B எனும் பதவி உயர்வு தேர்வில் தேர்ந்தார்.
இது பற்றி அபிலாஷா தெரிவித்ததாவது, 2018 ஆம் வருடம் சென்னையில் இருக்கும், Officers Training Academy-ல் பயிற்சி முடிந்த பின், ராணுவ விமானப் படைக்கு செல்ல விரும்பினேன். படிவத்தை நிரப்பும் போது, தரைப் பணிக்கு தான் எனக்கு தகுதி உண்டு என்பது தெரியும். இருப்பினும், பைலட் ஆப்டிட்யூட் பேட்டரி தேர்வு, கணினிமயமாக்கப்பட்ட பைலட் தேர்வு முறைக்கு தகுதியிருக்கிறது என்று பதிவிட்டேன்.
என் மனதில், இந்திய ராணுவம் பெண் போர் விமானிகளை தேர்ந்தெடுக்கும், அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றியது என்று கூறியிருக்கிறார். இராணுவ கன்டோன்மென்ட்களில் வளர்ந்த நான், சீருடை அணிந்தவர்களால் சூழப்பட்டேன். அது, சாதாரண நிகழ்வாக தோன்றியது. 2011-ஆம் வருடத்தில் என் தந்தை ஓய்வு பெற்ற பின், நாங்கள் ராணுவ வாழ்க்கையிலிருந்து வெளியேறும் வரை, அது வித்தியாசமான நிகழ்வு என்று நான் உணரவில்லை.
கடந்த 2013-ஆம் வருடத்தில் இந்திய ராணுவ அகாடமியில் என் அண்ணனின், பாசிங் அவுட் அணிவகுப்பைப் பார்த்தேன். அந்த உணர்வு வலுப்பெற்றது. என் வாழ்நாள் முழுக்க நான் செய்ய விரும்புவது என்ன என்று தெரிந்துகொண்டேன் என கூறியிருக்கிறார்.