மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்த நாட்டில் தற்போது வரை 48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.55 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மூன்றாமிடத்தில் இருக்கின்ற இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்பின்படி 18.55 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளைப் பற்றி அதிபர் டிரம்ப் வாசிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதாவது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைவிட மிகவும் பெரிய நாடு அமெரிக்கா. இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் தற்போது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இந்த அளவிற்கு பரிசோதனைகள் செய்யப்படவில்லை.
அதேசமயத்தில் பரிசோதனையின் முடிவுகள் அப்போதே அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆதார பூர்வமாக பார்க்க இயலுகிறது. தேசிய அளவில் சென்ற வாரத்துடன் ஒப்பிடும்போது புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6% குறைந்துள்ளது என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.