இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் காற்றில் கலக்கும் கார்பன் வாயுவை குறைக்க தங்களது பங்களிப்பை அதிக அளவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் காற்றிலிருந்து சுத்தப்படுத்தப்படும் கார்பன் வாயுவின் அளவும், வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து காற்றில் கலக்கும் கார்பன் வாயுவின் அளவும் சமமாக இருப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா.வின் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியுள்ளார். மேலும் கார்பன் சமநிலையை அடையும் போது ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் இந்த விவாதத்தின்போது கருத்தில் கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் கொள்கை அளவில் சர்வதேச கார்பன் சமநிலை என்பது பொதுவானதாக இருந்தாலும் சமத்துவம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபாடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆகவே முதலில் கார்பன் சமநிலையை வளர்ச்சியடைந்த நாடுகள் கூடிய விரைவில் எட்ட வேண்டும். மேலும் வருகின்ற 2050-ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் இலக்கு பற்றி விவாதம் செய்வதற்கு முன்னதாக வளர்ச்சியடைந்த நாடுகள் 2030-ஆம் ஆண்டுக்கான இலக்கினை எட்டுவதற்கு முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.