ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஜோ பிடன் இரு மாதங்களாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஜோ பிடன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் இவரும் ஒருவர்” என்று அவர் கூறியுள்ளார். கமலா ஹாரீஷின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவரின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அவரின் தாயார் இந்தியர். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண் கமலா ஹாரீஸ் தான். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடிய தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்டுள்ள முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.