COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகம் தெரிவித்திருந்தது.
உலகளவில் 70 % ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகளை இந்தியாதான் தயாரித்து விற்பனை செய்கிறது. குஜராத்தில் உள்ள முக்கியமான 4 மருந்து நிறுவனங்கள் இதை பெரும்பான்மையாக தயாரிக்கின்றன. இந்த நிலையில், இந்தியா விதித்த தடை காரணமாக சிக்கல் எழுந்ததால், பிரதமர் மோடியிடம் தடையை விலக்க டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இந்திய தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஏற்றுமதிக்கான தடையும் விலக்கப்பட வில்லை.
இதனால், எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம் என டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதனை அடுத்து, மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்தது. இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயலை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
அதில், “அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இந்த உதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமைக்கும் நன்றி” என குறிப்பிட்டார். இதற்கு பிரதமர் மோடி பதில் ட்வீட் அளித்துள்ளார். அதில்,
” நான் உங்கள் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன் அதிபர் டொனால்ட் டிரம்ப். இது போன்ற நேரங்கள் தான் நண்பர்களை மேலும் நெருங்கிய நண்பர்கள் ஆக வைக்கிறது. இந்தியா-அமெரிக்க உறவு முன்னெப்போதையும் விட வலுவாகியுள்ளது. COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும். இதை நாம் ஒன்றாக வெல்வோம்” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.