காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமுது குரேஷி கடிதம் மூலம் சீனாவுக்கு தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது.
ஆனால், கவுன்சிலின் மற்ற நாடுகள் தரப்பில், “காஷ்மீர் விவாகாரம் இருநாட்டுப் பிரச்னை; அதனை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீர்த்துக்கொள்ளட்டும். அந்த விவகாரத்தில் கவுன்சில் தலையிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இம்மாதிரியான கூட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு எப்போதும் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்புகூட நிகழ்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன், “காஷ்மீரில் பதற்றமான நிலை இருப்பதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை ஐ.நா.வில் எழுப்பிவருகிறது.
இவை அனைத்தும் இப்போது நம்பத்தகுந்ததாகப் பார்க்கப்படுவதில்லை. பாகிஸ்தான் முயற்சிகள் அனைத்தும் திசைதிருப்பும் முயற்சி என்பதை நட்பு நாடுகள் ஐ.நா.வில் சுட்டிக்காட்டியது வரவேற்கத்தக்கது” என்றார்.