உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்ய தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே, போரில் தற்போது உக்ரைன் இராணுவ படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகின்றது. ரஷ்ய இராணுவ படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகின்றது. இதனால், இரு தரப்புக்குமிடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா – மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கின்றார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கின்றார். இதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இது குறித்து அவர் பேசியதாவது, “உக்ரைன் விவகாரத்தில் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டுமென சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து கூறி வருகின்றன. அவர்களின் நிலைப்பாடு எங்களுக்கு தெரிகின்றது. இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியில் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ரஷ்யா மற்றும் உக்ரைனை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.