இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே எல்லை கட்டுப்பாடு கோடு வன்முறைகள் இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதிலிருந்து தொடர் பதற்றம் காரணமாக இரு நாட்டு படைகளும் எல்லைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி தங்களது வாகன கட்டமைப்பை மேம்படுத்தி வரும் சீனா உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் 100 வீரர்களை அனுப்பி அதன் பிறகு திரும்பப் பெற்றதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வான் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று கூறிய சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனா தான் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி லடாக் எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக கல்வான் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சீனாவிற்கு தாங்கள் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ராணுவத் தலைமைத் தளபதி நரவானே கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எல்லையில் பாதுகாப்பு பணிக்காக படைகளை குவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக நரவானே கூறியுள்ளார்.