Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சுருண்ட இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது.

இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரேச்சல் ஹேனஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தது. ஷஃபாலி வர்மா 5 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த அனுபவ வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் 11 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 16 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஸ்மிருதி மந்தனா – கேப்டன் ஹர்மன்ப்ரீத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த நிலையில், அதிரடியாக ஆடிய ஸ்மிருத் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத்திற்கு ஏற்பட்ட ப்ரஷரால் 28 ரன்களில் அவரும் பெவிலியன் திரும்ப, பின்னர் வந்த வீராங்கனைகளில் ராதாவை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக எலீஸ் பெர்ரி 4 விக்கெட்டுகளும், டைய்லா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் அலிஸா ஹேலி 1 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பெத் மூனி 6 ரன்களிலும், அதிரடியாக ஆடிய ஆஷ்லி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆச்திரேலிய அணி 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் அனுபவ வீராங்ககை எலீஸ் பெர்ரி ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறிது தாக்குபிடித்த கேப்டன் ரேச்சல் ஹேனஸ் 9 ரன்களிலும், ஜெஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 18 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியானது.

எலீஸ் பெர்ரி

இருந்தும் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சால் எலீஸ் பெர்ரியை 49 ரன்களில் பெவிலியன் அனுப்பினர். இதையடுத்து 19ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது.

ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகியாக ஆஸ்திரேலியான் எலீஸ் பெர்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முத்தரப்பு தொடரில் மூன்று அணிகளும் தலா வெற்றி பெற்றுள்ளதால், அடுத்துவரவுள்ள லீக் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |