இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு வகையான சாதனைகளையும் படைத்துள்ளார்.
அந்த வகையில், உள்நாட்டில் ரோகித் சர்மா இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் விளையாடி 1, 298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறார்.
மேலும் இந்த தொடரில் இந்தியா இதுவரை 47 சிக்சர்கள் (விசாகப்பட்டினம்-27, புனே-7, ராஞ்சி-13) விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர்கள் ஆகும். இதற்கு முன்பு 2013-14ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(இந்தியா) ஷேவாக் (இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருடன் தற்போது நான்காவதாக ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian cricketer Rohit Sharma surpassed former Australia cricketer Don Bradman's record of highest average in #TestCricket on home soil. pic.twitter.com/6frqfclR3w
— Doordarshan Sports (@ddsportschannel) October 21, 2019