கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளி மருத்துவர் செய்து வெற்றி பெற்றுள்ளார்
கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவ தொடங்கி ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில், தொற்றை தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முதலில் சேதமடைவது நுரையீரல். முழுமையாக நுரையீரலை பாதித்த பிறகு உடலின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதேபோன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரது நுரையீரல் முழுவதுமாக பாதிப்படைந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இந்தப் பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது நுரையீரல் முழுவதுமாக பாதிப்படைந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால், அவரது உயிருக்கே ஆபத்தாக போய்விடும் என்ற நிலை உருவானது. இதனால் இந்திய வம்சாவளி மருத்துவர் அன்கிட் பாரத் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு களமிறங்கினார்.
தொற்றினால் அவதிப்படுபவர்களது நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சை செய்வது சாதாரண செயலல்ல. இருந்தும் சவாலான இந்தப் பொறுப்பை இந்திய வம்சாவளி மருத்துவர் அன்கிட் பாரத் தனது மொத்த திறமையையும் காட்டி, தெளிவாக செயல்பட்டு, வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை முடித்து அந்தப்பெண்ணை பிழைக்க வைத்தார். இதுவே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவருக்கு நடைபெற்ற முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை. இதுகுறித்து இந்திய வம்சாவளி மருத்துவர் கூறுகையில் “இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது. எனது வாழ்நாளில் இப்படி ஒரு செயலை நான் செய்ததில்லை” என சாதனை செய்த உணர்வுடன் அவர் தெரிவித்தார்.