எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர்:
2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் போட்டியில் தரவரிசையில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
இந்தியா – நெதர்லாந்து:
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று புவனேஷ்வரில் நடைபெற்றது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. மறுமுனையில், முதல் போட்டியில் வெற்றிபெற்ற அதே உத்வேகத்துடன் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் விளையாடத் தொடங்கியது.
முதல் பாதியில் சொதப்பிய இந்தியா:
ஆட்டத்தின் நான்காவது, ஆறாவது நிமிடத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பை நடுகள வீரர் லலித் குமாரால் கோலாக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து, ஒன்பதாவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு வீரர் நீலகண்ட சர்மா வீணடித்தார்.
ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து:
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிங்க் வான்டர் வெர்டீன் கோல் அடித்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர் லலித் குமார் 26ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களது கொண்டாட்டம் நீடிப்பதற்கு முன் நெதர்லாந்து வீரர்களான ஜோரேன் ஹெர்ட்ஸ்பர்கர் (Jeroen Hertzberger), ஜார்ன் கெல்லர்மன் (Bjorn Kellerman) ஆகியோர் 26, 27ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அதகளப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியவாறு இரண்டாவது பாதியில் களமிறங்கியது. 33ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரும், 41ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாயப்பும் வீணடிக்கப்பட்டன.
இந்திய அணியின் கம்பேக்:
இருப்பினும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் தடுப்பாட்டத்தைக் கடந்து இந்திய வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். ஆட்டம் முடிய கடைசி பத்து நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய அணி எழுச்சிப்பெற தொடங்கியது.
அதுவரை நெதர்லாந்து அணியின் கட்டுப்பாட்டிலிருந்த இப்போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது. 50ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இம்முறை சரியாக பயன்படுத்தி மந்தீப் சிங் கோலாக்கினார்.
இதையடுத்து, 54ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் நட்சத்திர தடுப்பாட்டக்காரர் ருபிந்தர் பால் சிங் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயக்கும் விதமாக பெனால்டு ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
பெனால்டி ஷூட்டில் மெர்சல் காட்டிய இந்தியா:
இதைத்தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி முதல் மற்றும் நான்காவது வாயப்பை தவிர, ஏனைய மூன்று வாய்ப்புகளிலும் கோல் அடித்தது. மறுமுனையில், நெதர்லாந்து அணி முதல் மூன்று வாய்ப்புகளிலும் கோல் அடிக்காமல் நான்காவது வாய்ப்பில் ஆறுதல் கோல் அடித்தது. இறுதியில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருபிந்தர் பால் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.