இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக வியட்நாமில், யோகா ஆசிரியராக இருக்கிறார். அங்கு குயூன் டிசங் என்ற இளம் பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி, பின் காதல் வயப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, தங்கள் பெற்றோர்களிடம் சம்மதம் பெற்றனர். தற்போது குயூன், பிரதீப்பின் சொந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அவரின் பெற்றோரால் அங்கு வர முடியாமல் போனது. அவர்கள் இருவருக்கும் பிரதீப்பின் கிராமத்தில் வைத்து, இந்திய பாரம்பரிய முறைப்படி பத்திரிகை அடித்து, உணவு பரிமாறப்பட்டு திருமணம் நடந்திருக்கிறது.
இதுகுறித்து பிரதீப் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் அவள் என்னை திருமணம் செய்து கொள்வதற்காக எங்கள் கிராமத்திற்கு வருவாள் என்று ஆரம்பத்தில் நான் எதிர்பார்க்கவில்லை. கிராமத்தில் திருமணம் செய்துகொள்வது தொடர்பில் நான் அவளிடம் பேசியவுடன் அவள் சம்மதித்தாள்” என்று மகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.