பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிற நாடுகளில் பிறந்து பிரிட்டன் நாட்டில் வாழும் இந்திய மக்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 9 லட்சத்து 20 ஆயிரம் ஆக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் போலந்து நாட்டை சேர்ந்த மக்கள் 7 லட்சத்து 43 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. இதன்படி இந்திய மக்கள் 1.5%, போலந்து நாட்டை சேர்ந்தவர்கள் 1.2% மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு சதவீதம் வாழ்வதாக தேசியப் புள்ளியில் அலுவலகம் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இதே போல் இந்தியா, போலந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் தான் முதல் மூன்று இடங்களில் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.