இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கூட்டமைப்பினுடைய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்தாலோசித்துள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சி மாநாடானது, இன்று வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அழைப்பு விடுத்ததால், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அப்போது அமெரிக்காவிற்கு சென்று, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான, ஸ்காட் மோரிசனை நேரில் சந்தித்திருக்கிறார். இரு தலைவர்களும், இரு தரப்பிற்குமான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பேசியுள்ளார்கள்.
இது குறித்து, பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் உறவுகள், ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனை போன்றவை தொடர்பில் இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறியுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் பிரதமரான, யோஷிஹைடே சுஹாவையும் சந்தித்து உரையாடியுள்ளார். இரு தலைவர்களும், டிஜிட்டல் பொருளாதாரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, போன்றவை தொடர்பில் பேசியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.