சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்து மிகப் பெரிய குற்றத்தை சீன ராணுவம் இழைத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். இந்திய வீரர்களை எந்தவித ஆயுதங்களும் இன்றி நிராயுதபாணியாக எல்லைக் கோட்டுக்கு அனுப்பியது யார்? இதற்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என கூறியுள்ளார். 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என கூறிய அவர்,
சீனா உடனான மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என சோனியா காந்தியின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியா – சீனா எல்லை பிரச்சனையால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை என சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா – சீனா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன்19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.