அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட 22 மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமீரகத்தில், உலக அளவில், இனம், மொழி கடந்து மனித நேய செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் “டயானா விருது” வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 1999ஆம் வருடத்திலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான, டயானா விருதிற்கு மொத்தமாக சுமார் 46 நாடுகளிலிருந்து 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 9 வயதிலிருந்து 25 வயது வரை உள்ளவர்கள். இதில் துபாயில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் ரியா சர்மா என்ற மாணவி இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.
இவர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் கல்வி கற்க இயலாத ஏழை மாணவர்களுக்கு 200 தன்னார்வலர்களின் மூலமாக இணையதள வழி கல்வியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்ய பிற மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதேபோன்று துபாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் இந்தியாவை சேர்ந்த ராகவ் கிருஷ்ணா என்ற மாணவர் துபாய் கேர் அறக்கட்டளைக்கு, சிரியாவின் அகதிகளாக இருக்கும் சிறுவர்களுக்கு உதவும் விதத்தில் ஆலோசனைகள் அளித்து வருகிறார்.
மேலும் சார்ஜாவில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஹமத் பெய்க், ஏழாம் வகுப்பு பயிலும் ஜெயபிரகாஷ், 12 ஆம் வகுப்பு மாணவர் சுபாங்கர் கோஷ் போன்ற இந்திய மாணவர்களுக்கு டயானா விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்து இளவரசர் ஹாரி, விருது வழங்கப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.