ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவிகள் இருவருக்கு விக்டோரியன் பிரீமியர் விருது கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் பயிலும் பிற நாட்டைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்காக விக்டோரியன் பிரீமியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விக்டோரியா அரசு, தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறப்பான சர்வதேச மாணவர்களை கொண்டாடும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இன்னிலையில், விக்டோரியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த ரித்திகா சக்சேனா, திவ்யங்கனா சர்மா ஆகிய இரண்டு மாணவிகளுக்கு சிறந்த சர்வதேச மாணவர் விருது கிடைத்திருக்கிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு, பிரிவுக்கு தகுந்தவாறு பரிசுத்தொகையும் அளிக்கப்படும்.
அதிலும் பிரீமியர் பிரிவில் விருது வென்றவர்கள் 10,000 அமெரிக்க டாலர்களை பெறுவார்கள். இதில் இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு 2000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். திவ்யங்கனா சர்மா என்ற மாணவி 2021-2022 ஆம் வருடத்திற்கான சர்வதேச மாணவர் என்னும் விக்டோரியன் பிரீமியர் விருதை பெற்றிருக்கிறார்.
இதேபோன்று, ரித்திகா சக்சேனா, 2021-2022 ஆம் வருடத்திற்கான சிறந்த சர்வதேச மாணவர் விருதை ஆராய்ச்சி பிரிவிற்காக பெற்றிருக்கிறார்.