துபாயில் வாழும் இந்தியாவை சேர்ந்த பெண், தன் குடும்பத்தினர் 8 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்ததால் இந்தியாவிற்கு உதவி வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த ஜுஹி கான் என்ற 48 வயது பெண் துபாயில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவிலுள்ள இவரின் மாமனார் உட்பட குடும்பத்தினர் எட்டு பேரும் கடந்த 22 தினங்களில் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். எனவே தன் நாட்டில் கொரனோ பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
அதன்படி “உங்களோடு நாங்கள் இருக்கிறோம்” என்ற அமைப்பை உருவாக்கி உதவுகிறார். அதாவது “அல் பெர் சொசைட்டி” என்ற பிரபலமான தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பிற நாட்டு மக்களிடம் நிதி பெற்று இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்.
இந்த நிதியானது, இந்தியாவில் ஆம்புலன்ஸ் சேவைகளை சீரமைப்பதற்காகவும், பாதுகாப்பு கருவிகளை பெறவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு கண்ணீர் மீதம் இல்லாத அளவிற்கு தூக்கம் அடைந்துள்ளேன். என் குடும்பத்தினர் 8 பேரை 22 தினங்களில் இழந்து விட்டேன். இவ்வாறான இழப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இந்திய மக்களின் வலி எனக்கு புரிகிறது. என் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள், நான் தொடங்கிய இந்த முயற்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த உதவி, இந்தியாவிற்கு எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை தனக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு புரியும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர், இந்திய மருத்துவமனை அமைப்பு ஆஸ்டர் டிஎம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து பணிபுரியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.