டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம்.
இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா இல்ல ரேப் இன் இந்தியா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்த்த போது, 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லியை ரேப் கேப்பிடல் என மோடி விமர்சித்ததை ராகுல் சுட்டிக் காட்டி இருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்தஅமளியையும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் தவிர்த்து விட்டு கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் இருக்கிறது.
1/2 மணி நேரத்திற்கு 2 பெண்கள் பாலியல் கொடுமை :
தலைநகர் டெல்லியை ரேப் கேப்பிட்டல் என பிரதமரும் , ரேட் இன் இந்தியா என எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவரும் விமர்சிக்கும் அளவிற்கா நாடு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால் விவாதங்கள் இன்றி ஆம் என்று பதிலளிக்கலாம். இந்தியாவில் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் 2 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வருகிறார்கள் என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை.கால சூழலுக்கு ஏற்ப அந்த குற்றங்களின் தன்மையும், கொடூரமாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.
நிர்பயா ( என்பதன் அர்த்தம் )
2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வுக்கு பின்புதான். தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் மீண்டு வரவேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருந்தது. இத்தனை தாக்குதலுக்கு பின்னும் உயிருக்காக கடுமையாக போராடிய அந்த பெண்ணை தைரியமானவர் என பொருள்பட நிர்பயா என ஊடகங்கள் அழைத்தன.
16.12.2012 இல் தலைநகரில் கொடூரம் :
2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் உள்ள மால் ஒன்றில் நிர்பயாவும் அவரது ஆண் நண்பரும் , மாலை நேர சினிமா பார்த்துவிட்டு தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா பகுதிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தனர். முனீர்கா பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்தோ, ஆட்டோவோ கிடைக்காததால் துவாரகா செல்ல தனியார் பேருந்தில் இருவரும் ஏறி உள்ளனர். ஆண் நண்பரின் வாக்குமூலம் அடிப்படையில் பேருந்தில் ஏறும் போதே ஓட்டுனர் உட்பட 6 பேர் இருந்துள்ளனர்.
6 பேரும் பாலியல் வன்புணர்வு :
பேருந்து பாதை மாறிச் செல்வதை உணர்ந்த இருவரும் கூச்சலிட, பேருந்தில் ஏற்கனவே இருந்த நபர்கள் இருவரையும் தாக்கினர். இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் உனக்கு என்ன வேலை? என அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உடைமைகளையும் பறித்துள்ளனர். தற்காப்புக்காக இருவரும் தாக்க ஆண் நண்பரை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியதோடு, அதன்பின் மதுபோதையில் இருந்த 6 பேரும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.
தூக்கி வீசப்பட்ட நிர்பயா :
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த பெண் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார். தன் மீதான வன்முறையை தடுக்க அந்த பெண் மிகக்கடுமையாக போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கனமான இரும்பு ராடு ஒன்றினால் அந்த பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கியிருந்தது. கடுமையான உதிரப்போக்குடன் பாதி மயக்கத்தில் இருந்த இருவரையும் பேருந்தில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.
கொல்ல முயற்சி :
சாலையில் வீசப்பட்ட இருவர் மீதும் பேருந்தை ஏற்றி கொல்லவும் அந்த கும்பல் முயற்சி செய்துள்ளது. இரவு எட்டு முப்பது மணிக்கு பேருந்து எற வந்து இருவரும் தெற்கு டெல்லி புறநகர் பகுதியில் சாலையோர புதரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூக்கி வீசப்பட்டு இருந்தனர் . உறையவைக்கும் டெல்லி பனியில் அரைநிர்வாணமாக இருந்த இருவரையும் இரவு 11 மணியளவில் போலீசார் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தியர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியது :
அந்த சம்பவம் இந்தியாவின் கூட்டு மனசாட்சியை தட்டி எழுப்பியது. இந்த பாலியல் வன்முறை குறித்த தகவல் வெளியானபோது ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டன. பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயாவுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நிர்பயாவின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பேருந்து அடையாளம் காணப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
24 மணி நேரத்தில் முதல் குற்றவாளி கைது :
சிசிடிவி காட்சிகளின் உதவியோடு பேருந்தின் அடையாளம், நிர்பயா மற்றும் அவரது நண்பரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன்கள் ஆகிய ஆதாரத்தின் மூலம் தேடல் நடந்தது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் அதில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் ராம்சிங் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருந்த ராம் சிங்கின் சகோதரர் முகேஷ் சிங் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊரில் கைது செயப்பட்டார்.
போராட்டத்துக்கு வந்த நடுத்தர வர்க்கம் :
நாட்டின் தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பற்று இருப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. டெல்லியில் நடந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியா பெண்களுக்கு என்ன வகையான பாதுகாப்பை அளிக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. டெல்லி , மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். குறிப்பாக பொது பிரச்சனைகளில் அதிகம் தலையிடாத நடுத்தர வர்க்கம் இந்த பெண்ணுக்காக போராட வீதிக்கு வந்தது.
நாடு முழுவதும் கடும் போராட்டம் :
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 2012 டிசம்பர் 21இல் டெல்லி இந்தியா கேட் பகுதியில் கூடிய மக்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடின.பின்னர் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அரசு கட்டிடங்கள் அமைந்திருக்கும் ரைசானா கில் பகுதிக்கு நகர்ந்த போராட்டக்காரர்கள் அங்கு தங்கள் போராட்டங்களை தொடர்ந்தன.இந்திய நாடாளுமன்றம் முன்பு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவுக்கு போகாதீங்க இங்கிலாந்து, அமெரிக்கா அறிவுறுத்தல் :
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு வரும் தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டும் என இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் அறிவுறுத்தல்களை வழங்கின.போராட்டங்கள் ஒரு புறம் தீவிரமடைய மீதமிருக்கும் கொஞ்சம் குற்றவாளிகளை நெருங்க டெல்லி போலீஸ் திணறியது.
மேலும் 2 பேர் கைது :
பேருந்தில் பயணித்த 6 பேரில் 2 பேரை கைது செய்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்ததில் இந்த விவகாரம் மிகவும் பெரிதாகிவிட்டதை தொலைக்காட்சிகளில் பார்த்தோம் எனவே பேருந்தில் இருந்த தடயங்களை அழித்து விட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து விட்டோம் என வாக்குமூலம் அளித்தனர்.
குற்றவாளிகள் வாக்கு மூலம் :
விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு நேரத்தை கழித்ததாகவும், பேருந்தில் ஏறும் அவர்களிடம் இருந்து பணத்தையும் பொருட்களையும் தாம் கைப்பற்றிய திட்டமிட்டோம். ஆனால் நிர்பயாவும் அவரது ஆண் நண்பரும் எங்களைத் தாக்க முற்பட்டதால் தான் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்தனர்.
டெல்லி போலிஸுக்கு நெருக்கடி :
மேலும் இரண்டு குற்றவாளிகளை கண்டறிவது காவல்துறைக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஒரு புறம் போராட்டக்காரர்கள் மறுபுறம் மத்திய மாநில அரசுகளின் அழுத்தத்தோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை குறித்த வழக்குகள் என காவல்துறைக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள், ஆண் நண்பர் வாக்குமூலம் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
சிக்கிய சிறார் குற்றாவளி :
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 வயது நிரம்பாத சிறார் குற்றவாளியை டெல்லி டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அந்த இளம் குற்றவாளி இடமிருந்து நிர்பயாவின் ஆண் நண்பருடைய செல்போன் கைப்பற்றப்பட்டது. 6ஆவது குற்றவாளியான அக்சய் தாகூர் பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் பகுதியில் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த 5 நாட்களில் குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தீவிர சிகிச்சையில் நிர்பயா :
அதே நேரத்தில் மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறப்புறுப்பில் வண்டிகளில் சக்கரம் மாற்ற பயன்படுத்தும் துருப்பிடித்த இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறப்புடன் அவரின் சிறுகுடலும் பாதிக்கப்பட்டு இருந்ததால், கடுமையான நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.
கைது செய்து வீட்டீர்களா ? என்ற கேள்வியுடன் நிர்பயா வாக்குமூலம் :
அறுவை சிகிச்சைக்கு பின் நிர்பயாவுக்கு சுயநினைவு திரும்பிய பின் அவரிடம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்குமூலம் அளித்த பின் தன்னுடைய இந்த நிலைக்கு ஆளாக்கிய அவர்களை கைது செய்து விட்டீர்களா ? என அவர் கேட்டதாக செய்திகள் வெளியானது. அது அவர் எவ்வளவு மன தைரியத்துடன் இந்த சூழ்நிலை எதிர்கொள்கிறார் என அனைவரையும் உணரச் செய்தது.
மிகவும் மோசமான நிர்பயா உடல்நலம் :
டிசம்பர் 21 அன்று மத்திய அரசு நிர்பயாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கண்காணிக்க மருத்துவர் குழுவை அமைத்தது. அந்த குழு மருத்துவமனையில் நிர்பயாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அவரின் உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. கடுமையான உதிரப் போக்கு ஏற்பட்டு, கீழ் வயிற்று பகுதி மோசமாக நிலையில் இருந்ததால் ஐந்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. ரத்தத்தில் செப்பிஸ் எனப்படும் தொற்று ஏற்பட்டதால், உடல் உறுப்புகள் தொற்று ஏற்பட தொடங்கியது.
போராட்டத்தில் போலீஸ் உயிரிழப்பு :
நிர்பயாவுக்கு இத்தனை கொடூரங்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என போராட்டங்கள் தீவிரமடைந்தன. டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த மக்களுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த மோதல்களில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார். யோகா குரு பாபா ராம் தேவ் , முன்னாள் ராணுவ தளபதி VK.சிங் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் இணைந்தனர்.டிசம்பர் 22 அன்று போராட்டக்காரர்கள் ரைசானா கீல் பகுதியில் கூடுவதை தடுக்கும் வகையில் டெல்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
போராட்டத்தை ஒடுக்கிய மத்திய அரசு :
டிசம்பர் 24-ஆம் தேதி போராட்டங்களை தடுக்கும் நோக்கில் இந்தியா கேட் பகுதிக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடிய பாதுகாப்புத்துறை, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், டெல்லியில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த தனியார் பேருந்துகள் அரசின் தீவிர கண்காணிப்புக்குள் வந்தன. பேருந்துகளிலும், கார்களிலும் ஒட்டப்பட்டிருந்த கருப்பு நிற பிலிம்கள் அகற்றப்பட்டன.
பிரதமர் மன்மோகன் சிங் வேதனை :
2012 டிசம்பர் 24 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய, அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் அந்த சம்பவம் 3 பெண்களின் தந்தையான தன்னை மிகவும் பாதித்ததாகவும் தெரிவித்தார். சப்தர்ஜங் மருத்துவமனைக்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிர்பயாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்பயா :
ஒருபக்கம் நிர்பாயாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கொண்டிருக்க, இன்னொருபுறம் நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் நிர்பயாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே நிர்பயா இருந்தார். டிசம்பர் 25 வரை உயிர்காக்கும் கருவிகள் உதவியின் மூலமே நிர்பயா காப்பாற்றப்பட்டு இருந்தார்.
மத்திய அரசுக்கு நெருக்கடி :
மேலும் கடுமையான ரத்தப் போக்கு காரணமாக அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும், கூறப்பட்டது. அதனால் நாட்டில் உருவான பரபரப்பான சூழலால் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. அந்த சம்பவம் குறித்து பேச நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்தது.
சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிர்பயா :
2012 டிசம்பர் 26 என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. சிங்கப்பூரில் அமைந்திருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நிர்பயாவை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. நிர்பயாவின் உடல்நிலை மற்றும் மக்கள் போராட்டம் இரண்டையும் கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லி முதல்வரின் பின்னணி :
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு உலகளவில் புகழ்பெற்றது. நிர்பயாவை சிங்கப்பூர் அனுப்பும் முடிவின் பின்லால் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் இருந்ததாக கூறப்பட்டது.2012 டிசம்பர் 27 அன்று ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார் நிர்பயா.
மிக மிக மோசமான நிர்பயா உடல் :
விமானத்திலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து. அவரின் நாடி துடிப்பு மிகவும் குறைந்து, மருத்துவர்கள் சிகிச்சை மூலம் சீரான நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மோசமான உடல் தொற்று காரணமாகவும், பிறப்புறுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு தொற்றும் கல்லீரல் வரை பரவி இருந்தது.
நிர்பயா மரணம் :
இதனால் அவரின் சிறுகுடலை முழுவதும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கு நிர்பயாவின் உடல்நிலை தயாராக இல்லை. உடல் உறுப்புகள் முற்றிலும் செயலிழந்த நிலையில் 2012 டிசம்பர் 29 அன்று மரணமடைந்தார் நிர்பயா. நிர்பயாவின் மரணச்செய்தி இந்திய அரசை மீண்டும் பரபரப்பை ஆக்கியது.
நாடு முழுவதும் அமைதி பேரணி :
தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் மக்களை திரள விடாமல் செய்ய பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்தது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். சென்னை , கொல்கத்தா ,பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி கொண்டு அமைதிப் பேரணி சென்றனர்.
ரகசிய இறுதி சடங்கு :
சிங்கப்பூரிலிருந்து நிர்பயாவின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நிர்பயாவின் உடலை பெற்றுக்கொண்டனர். நிர்பயாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைவரையும் உறைய செய்யும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் என எதுவும் தெரியாமல் இந்த மக்கள் அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அவரது இறுதி சடங்கு குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸ் மீது விமர்சனம் :
கடுமையான பாதுகாப்போடு நிர்பயாவின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. நிர்பயாவின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டது எமர்ஜென்சி காலத்தை நினைவு படுத்தியதாக அன்றைய பிரதான எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்தது.அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை காவல்துறை விசாரித்து, அவர்களை போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாத்து வந்தது. பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அக்சய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் குற்றம் நடக்கும் போது 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளி ஒருவரும் கைது செய்யபட்டனர்.
டெல்லி விரைவு நீதிமன்றம் விசாரணை :
அவர்கள் மீதான வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கை விசாரிக்க 5 விரைவு நீதிமன்றங்களை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட பவன்குமார் தன்னுடைய தவறை தாம் ஒப்புக் கொள்வதாகவும், தனக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் அங்கிருந்த மற்ற சிறை கைதிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளி தற்கொலை :
2013 மார்ச்சில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராம் சிங் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூன்று கைதிகள் ஒன்றாக இருந்த அறையில் தூக்கிட்டு இருந்ததால் இது தற்கொலை தானா ? என கேள்விகள் எழுந்தன. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டான்.
இளம் குற்றவாளி விடுதலை :
ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாதகுற்றத்தை செய்த ஒரு நபருக்கு 18 வயது ஆகவில்லை என்பதற்காக மூன்றாண்டுகளில் விடுதலை செய்வதா ? என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இளம் குற்றவாளியின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை பத்தாயிரம் நிதியும், தையல் இயந்திரமும் வழங்கியதும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் இந்த விமர்சனங்களின் நீட்சிதான் சிறார் குற்றங்களுக்கான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வித்திட்டது .எஞ்சிய நால்வருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
குற்றவாளி வழக்கறிஞ்சர் சர்சை கருத்து :
நால்வர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, திருமணமாகாத ஒரு பெண் இரவு நேரத்தில் பொது போக்குவரத்தை எப்படி பயன்படுத்தலாம்? என கேள்வி எழுப்பியது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. மரியாதைக்குரிய பெண்ணை யாரும் தவறாக தொட மாட்டார்கள் என்றும், நிர்பயா அணிந்திருந்த ஆடையையும் விமர்சித்தார்.
மரண தண்டனை விதிப்பு :
அதே நேரத்தில் உடன் வந்த பெண்ணை காக்கத் தவறியது அந்த ஆண் நண்பரின் தவறு என்றும் வழக்கறிஞர் சொன்னது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் , கைரேகை , டிஎன்ஏ டெஸ்ட் ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. அதனடிப்படையில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013 செப்டம்பரில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நிர்பயாவின் உண்மையான பெயர் :
2017 ஆம் ஆண்டு மே 5 அன்று குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தன் மகளின் பெயரை உலகம் அறிய வேண்டும் என்றும், தன்னை காப்பாற்றும் முயற்சியில் தான் என் மகள் உயிரிழந்துள்ளார் என கூறினார். தன் மகளை நினைத்து தான் பெருமை படுவதாகவும், அவர் மூலம் இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கு தைரியம் கிடைக்கும் என அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் அந்த பெண்ணின் பெயரில் ஜோதி சிங் என வெளியிட்டன.
நிர்பயா – ஜோதி சிங் :
சிறார் குற்றவாளிகள் விடுதலையின் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்தன. அப்போது நிர்பயாவின் தாயார் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என பகிரங்கமாக அறிவித்தார். நாட்டின் கூட்டு மனசாட்சியை உலுக்கிய இந்த கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பிற்கான பல சட்டங்களை பலப்படுத்துவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
நீதிபதி தலைமையில் குழு :
இந்த சம்பவத்தை தொடர்ந்து 2012 டிசம்பர் 22 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ் வர்மா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரை அந்த குழுவால் அளிக்கப்பட்டது.
புதிய சட்ட திருத்தம் :
2013 பிப்ரவரியில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதியளித்தார். அதேநேரத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கான தண்டனை 20 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனை காலத்தையும் உயர்த்த பரிந்துரை செய்தது.மேலும் பெண்கள் உரிமைக்கென தனி சட்டம் இயற்றவும் வர்மா கமிட்டி பரிந்துரை செய்தது.
இந்தியாவின் மகள் :
நிர்பயா விவகாரம் குறித்த சர்ச்சை வெகு காலம் தொடர்ந்தது. 2015ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி நிறுவனம் நிர்பயா குறித்த ஒரு ஆவணப்படத்தை இந்தியாவின் மகள் என்ற பெயரில் எடுத்தது. இந்தியாவை அதை என்டிடிவி நிறுவனம் ஒளிபரப்பும் என அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மகளிர் தினத்திற்கு அந்த ஆவணப்படம் வெளிப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து சர்ச்சை கிளம்பியது.
ஆவணப்படத்திற்கு தடை :
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை ஆவணப்படத்திற்காக பேட்டி எடுத்ததாக கூறப்பட்டது. மேலும் குற்றவாளிகளில் ஒருவர், இரவு நேரத்தில் பெண்ணொருவர் வெளியே சென்றால் கற்பழிக்கப்படுவார் என கூறியதும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து 2015 மார்ச் 4 அன்று இந்தியாவின் மகள் ஆவணப் படத்திற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது மத்திய அரசு. இதனையடுத்து இந்தியாவில் ஆவணப் படம் வெளியாகாது என அறிவித்தது பிபிசி.
இங்கிலாந்தில் ஆவணப்படம் :
2015 மார்ச் 4 அன்று பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்த அரசு அனுமதிக்காது என்றார். இங்கிலாந்தில் மார்ச் 5 அன்று வெளியான இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.
யூட்யூப்பில் நீக்கம் :
பின்னர் அதனை யூட்யூப்பில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு என்டிடிவி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.ஆவணப் படம் திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நேரத்தில் தனது தொலைக்காட்சி திரையை கருப்பாக்கி ஒரு அகல் விளக்கின் ஒளிக்கு கீழ் இந்தியாவின் மகள் என அந்த ஆவணப்படத்தில் பெயரை திரையில் காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தது.
என்டிடிவி நிர்வாகம் கண்டனம் :
இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் சத்தமிட மாட்டோம், ஆனால் எங்களின் குரல் மக்களுக்கு கேட்கும் என என்டிடிவி நிர்வாகம் தெரிவித்தது.ஆவணப்படம் நம் நாட்டில் பெண்களின் நிலையை தான் விளக்க போகிறது என்றும், அதற்கு தடை போடுவது மூலம் அரசால் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியுமா ? எனவும் கேள்விகள் பாஜக அரசின் மீது எழுப்பப்பட்டன. நாடு முழுவதும் ஓரணியில் நின்று போராடி சட்டத்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு, சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டது.
தூக்கு தண்டனை :
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என நாட்டு மக்கள் பலர் கோரிக்கை விடுத்தன. அதன்படி அந்த நாலு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்களும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற செய்தது.
தூக்கு தண்டனைக்கு எதிராக மேல்முறைகேடு :
தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என ஒருபக்கம் மக்கள் குரல் ஒலித்துக்கொண்டிருக்க கருணை மனுவை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து குற்றவாளிகள் நாலு பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.இதற்கிடையில் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
20.03 காலை 5.30 மணிக்கு தூக்கு :
ஆசையாய் வளர்த்த மகள் போராடி இறந்ததை பார்த்த பிறகு பெற்றோர்களும், குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றமும் நியாயத்தின் பக்கம் நின்று இந்தியாவின் மகள் நிர்பயாவின் மரண போராட்டத்துக்கு வெற்றியாக தீர்ப்பு எழுதி இன்று (20.03) காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.