இந்தியா, உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன.
இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ஸி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, இந்தியா, உக்ரேன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.
மருத்துவ கருவிகள் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக இயக்கப்பட்ட ஆறு விமானங்களில் இந்திய மக்கள் 1400 பேர், தங்கள் நாட்டிற்கு திரும்பியிருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டிலிருந்து, இந்தியாவை சேர்ந்த 8000 மக்கள் வெளியேறி விட்டனர். மேலும் மூன்று விமானங்கள் இயக்கப்படும். இந்திய மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட பின்பு தான் மாணவர்கள் உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியை கடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.