ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை முறித்துக் கொள்ள போவதாகவும் , இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு செல்லக்கூடிய பொருட்களைக் கூட பாகிஸ்தான் வழியாக செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு பதில் கொடுக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில் , பாகிஸ்தான் தன்னிச்சையாக எடுக்கும் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு தவறானது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்வது என்பது இந்தியாவின் முடிவு. இந்திய நாட்டுக்கு உள்ள ஒரு பகுதி குறித்து இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.எனவே பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். இது இந்தியா பாகிஸ்தான் உறவை பாதிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.