கேரளா மற்றும் உத்தரகாண்டில் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோருக்கு ஜப்பான் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரளா, உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பெய்து வருகின்ற கனமழையால் பலவேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி 117 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த 42 பேர், மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த 75 பேரும் அடங்குவர்.
மேலும், நிலச்சரிவில் சிக்கிய சிலரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது, “கேரளா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டுகிறேன்” என்றும் எழுதியுள்ளார்.