நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனையடுத்து தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.
எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதனால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.