இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெண் எம்,பி தான் முஸ்லீம் என்பதால் பதவியை பறித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பியாக இருக்கும் நஸ்ரத் கனி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடந்த 2018 ஆம் வருடத்தில் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவியில் இருந்த போது, போக்குவரத்து துறைக்கான இணை அமைச்சராக இருந்தேன். அதன்பிறகு கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது என் பதவியை பறித்துவிட்டனர். அதற்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கட்சி கொறடாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்டேன். அவர், அமைச்சரவை மாற்றப்பட்டதற்கான உயர்மட்டக் கூட்டத்தில் நான் முஸ்லிம் என்பது ஒரு காரணமாக கூறப்பட்டதாக தெரிவித்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதனால் கட்சியின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டேன். இந்த பிரச்சனையை வெளியில் கூறினால், என் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் என்பதால் தான் இதனை கூறவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.