சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 23 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிக விலைகளுக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் அதிக அளவில் சாராய விற்பனையும் நடைபெற்று வந்துள்ளது. இது பற்றிய தகவல் குறித்து மாவட்ட காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர், மணிமங்கலம், சோமங்கலம், சாலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 250 லிட்டர் சாராய ஊழலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 150 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜெயபால், செந்தில்குமார், பத்மா, ரவிக்குமார் என மொத்தம் 23 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் போன்ற விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.