இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமிருப்பது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமாயில் எண்ணையின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதால், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று அனைத்து வகையான ஏற்றுமதியையும் இந்தோனேசிய அரசு தடை செய்திருக்கிறது. சமையல் எண்ணெய்க்கான விலை உள்நாட்டில் குறைந்த பிறகு இந்த தடை நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளிலேயே, இந்தோனேசியா தான் பாமாயில் ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சர்வதேச வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.