இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் கிராமப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துவர முடியவில்லை. எனினும், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜாவா தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 8 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பசுருவான் என்ற சிறு நகரத்தில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் சுமார் 350 பேர் வெளியேறி வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்தோனேசியாவில் அடிக்கடி இடைவிடாத கனமழை பொழிவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தெற்கு கலிமண்டான் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 21 பேர் பலியாகினர். மேலும், 60,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.