ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்துள்ளது
இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது..
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக 6:30 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில், நேற்று பெய்த பலத்த கனமழையின் காரணமாக ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் நீண்ட நேரம் கழித்து 9 மணிக்கு மேல் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச முடிவு செய்தார். போட்டியும் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது..
இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். போட்டி 8 ஓவர் என்பதால் தொடக்க முதலே பிஞ்ச் அதிரடியாக ஆடினார். கிரீன் 5 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆகி வெளியேறினார்.. அதனைத் தொடர்ந்து வந்தவேகத்தில் அக்சர் பட்டேல் ஓவரில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். அதன்பின் டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடி வந்த பின்ச் 31 (15)ரன்கள் எடுத்தநிலையில் பும்ரா வீசிய 5ஆவது ஓவரில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கடைசியில் மேத்யூ வேட் கடந்த போட்டியை போல அதிரடியாக ஆடினார்.. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி 8ஆவது ஓவரில் வேட் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார்.. கடைசி ஓவரில் 19 ரன்கள் கிடைக்க ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்தது.. மேத்யூ வேட் 20 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.. ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது