முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி..
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 71* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்தனர்.. ஆஸ்திரேலிய அணியில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பின் பிஞ்ச் 22 (13) ரன்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கிரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர். கிரீன் 30 பந்துகளில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்மித்தும் 35 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்..
அதன் பின் வந்த மேக்ஸ்வெல் 1, இங்கிலிஷ் 17 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், கடைசியாக மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பினார். கடைசி 18 பந்துகளில் 40 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷல் பட்டேல் வீசிய 18ஆவது ஓவரில் வேட் ஒரு 2 சிக்ஸர், டிம் டேவிட் 1 சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 23 ரன்களை வழங்கினார்.
அதன்பின் புவனேஷ்வர் குமார் வீசிய 19ஆவது ஓவரில் மீண்டும் வேட் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட 15 ரன்கள் கிடைத்தது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட டேவிட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த கம்மின்ஸ் பவுண்டரியுடன் முடித்து வைத்தார்.. ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து வென்றது. மேத்யூ வேட் 21 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இரு அணிகளும் மோதும் 2ஆவது போட்டி 22 ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது.