இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி..
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் 4ஆவது டி20 போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துவக்க வீரர் பெத் மூனி 2 ரன்னில் அவுட் ஆன போதிலும், மற்றொரு துவக்க வீரர் கேப்டன் அலீஷா ஹீலி 30 (21) ரன்கள் எடுத்த நிலையில், அவருக்கு வலது காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு ஓய்வு பெற்றார்.
அதன்பின் வந்த தஹ்லியா மெக்ராத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். அதனைத் தொடர்ந்து கார்ட்னர் 27 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் பெர்ரியுடன் கிரேஸ் ஹாரிஸ் சேர்ந்து அதிரடியாக ஆட 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. எல்லிஸ் பெர்ரி 42 பந்துகளில் 72* ரன்களுடனும், ஹாரிஸ் 27*(12) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ஸ்மிருதி மந்தனா 16 மற்றும் ஷபாலி வர்மா 20 ரன்களிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் மற்றும் தேவிகா வைத்யா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். பின் ஹர்மன் ப்ரீத் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இதையடுத்து ரிச்சா கோஸ் களமிறங்கி ஆடி வந்த நிலையில், மறுபுறம் பொறுப்பாக ஆடிய தேவிகா 32 (26) ரன்கள் சேர்த்த நிலையில் 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.. கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரில் ரிச்சா கோஸ் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி என அதிரடியாக ஆட 18 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 20 தேவைப்பட தீப்தி சர்மா 2 பவுண்டரி விளாச 12 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ரிச்சா கோஸ் 19 பந்துகளில் 40 ரன்களுடனும், தீப்தி சர்மா 12 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.