பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
இதன் மூலம் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 54 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் 29 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பந்திடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த முகமது நைம் 36ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹீம் 4ரன்களில் வெளியேறி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சௌமியா சர்கார் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹாலிடம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.இறுதியாக அதிரடியில் களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் முகமதுல்லா 21 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதன் மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நைம் 36 ரன்களை சேர்த்தார். இந்திய அணி சார்பில் சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிண்டன் சுந்தர், கலீல் அஹ்மது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 154ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பங்களாதேஷ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வழக்கமான அதிரடியை காட்ட ஷிகர் தவான் நிதானமாக ஆடினார். 10.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 118 இருந்த போது ஷிகார் தவான் அமினுல் இஸ்லாம் பந்தில் 27 பந்துகளில் 31 ரன் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிக்ஸர்களாக பறக்கவிட்டுக் கொண்டு இருந்த ரோஹித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அமினுல் இஸ்லாம் பந்தில் 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர் , 6 பவுண்டரி அடங்கும்.
இதையடுத்து இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல் 8* , ஷ்ரேயஸ் ஐயர் 24* ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் அமினுல் இஸ்லாம் 2 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி T20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
It was a HITMAN show in Rajkot as #TeamIndia win by 8 wickets in the 2nd T20I and level the three match series 1-1.#INDvBAN pic.twitter.com/iKqnflKpFp
— BCCI (@BCCI) November 7, 2019