ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் பிஸ்மா மரூஃப் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அனுபவ வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 17 மற்றும் சப்பினேனி மேகனா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெமிமா 2, ஹேமலதா 20, கேப்டன் ஹர்மன் பிரீத் 12 , பூஜா 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.. மற்றபடி யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக ரன்கள் சேர்க்கவில்லை.. இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், நிடா தார் மற்றும் சாடியா இக்பால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணியை பலமுறை இந்திய அணி தோற்கடித்து இருக்கும் நிலையில், இந்த போட்டியில் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Solid performance from Pakistan to beat India at #WomensAsiaCup2022 👏#INDvPAK | Scorecard: https://t.co/q7hQyhU2pZ pic.twitter.com/BjK7v5mqBl
— ICC (@ICC) October 7, 2022