இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஷாக் தந்தார்.
ரபாடா வீசிய 10ஆவது ஓவரின் கடைசி பந்தை டிஃபெண்ட் செய்ய நினைத்த ரோகித் ஷர்மா, டி காக்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாராவும் ரபாடாவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகியிருப்பார். ஆனால், அவர் தந்த கேட்ச்சை ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டெம்பா பவுமா தவறவிட்டார்.
இதனால், புஜாரா மிகவும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். மறுமுனையில், மயாங்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் புஜாரா 58 ரன் எடுத்தநிலையில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி சற்று முன்வரை 54 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது. மயாங்க் அகர்வால் 87 ரன்களிலும் , கேப்டன் கோஹ்லி 1 ரன்களிலும் களத்தில் விளையாடி வருகின்றனர்.