ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் குவித்தது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி 2020-க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடருக்காக இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் இரவு 7 மணி முதல் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், கே எல் ராகுலும் களமிறங்கினர். ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், கே எல் ராகுல் சிறப்பான ஆடி நல்ல தொடக்கம் கொடுத்தார். அடுத்து வந்த கோலி 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த சூரியகுமார் யாதவும், கே.எல் ராகுலும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது..
ராகுல் மீண்டும் அரைசதம் அடித்து பார்முக்கு வந்தார். அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. இதையடுத்து 12 ஆவது ஓவரில் கே.எல் ராகுல் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழந்தார். அதன்பின் மறுபுறம் சிறப்பாக ஆடிவந்த சூர்யகுமார் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 25 பந்துகளில் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார்..
இதற்கிடையே வந்த அக்சர் பட்டேல் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்த தினேஷ் கார்த்திக்கும் 19ஆவது ஓவரின் எல் பி டபிள்யூ ஆகி 6 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஹர்திக் பாண்டியா தனது ருத்ர தாண்டவத்தை நிறுத்தவில்லை.. கேமரூன் கிரீன் வீசிய கடைசி ஓவரில் கடைசி 3 பந்தில் ஹர்திக் தொடர்ந்து சிக்ஸர் விளாசி சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.. இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது..
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 71* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஹர்ஷல் பட்டேல் 7* ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி களமிறங்கி ஆடி வருகிறது..