நாங்கள் பாகிஸ்தானை பற்றி பார்க்கவில்லை, எங்கள் பலம் மற்றும் எங்களிடம் என்ன இருக்கிறது என்பதை தான் பார்க்கிறோம் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்..
ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய 2022 ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில் 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர்4 சுற்றின் 2ஆவது போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை விலக்க முடியாது என்றும், முழங்கால் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகுவதாகவும் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
அப்போது காயம் காரணமாக ஜடேஜா உலகக் கோப்பையை இழக்கும் சாத்தியம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த டிராவிட், பெரிய கிரிக்கெட் நிகழ்வுக்கு இன்னும் நேரம் உள்ளது “ஜடேஜாவுக்கு அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனவே, அவரை அதிலிருந்து விலக்கிவிட முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். அதைப் பற்றி எங்களுக்கு தெளிவான படம் கிடைக்கும் வரை நான் அவரை நிராகரிக்கவோ அல்லது பல கருத்துக்களை வெளியிடவோ விரும்பவில்லை.
“முழு அணியை உருவாக்க முயற்சிப்பதன் நோக்கம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் விளையாட முடியும் என்பதே. நாளைய (இன்று) போட்டியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் சிறந்த பந்துவீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்,” என்று கூறினார்.
மேலும் அவர் “எங்களுக்கு மட்டும் தான் மற்ற போட்டியை போல ஒரு போட்டி மட்டுமே. நாங்கள் வெற்றி பெற்றால், நல்லது. தோற்றால் பின்னர் இலங்கைக்கு எதிராக விளையாடுவோம். எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் உள்ளது, ஆனால் நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை. நீங்கள் வீரர்களை மதிப்பிட முடியும், மேலும் என்னிடம் உள்ள கேள்விகளுக்கு என்னால் நிறைய பதில்களைப் பெற முடியும் என்றார்.
பாகிஸ்தானின் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவைப் பாராட்டிய டிராவிட், “நசீம் ஷா நன்றாகப் பந்து வீசியுள்ளார், ஆனால் எங்கள் பேட்டர்கள் கூட பாகிஸ்தானுக்கு எதிராக ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் பாகிஸ்தானிடம் இருப்பதைப் பற்றி பார்க்கவில்லை, எங்கள் பலம் மற்றும் எங்களிடம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்றார்.