இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கார்ட்னர் 67 ரன்னும் , பெத் மூனி 52 ரன்னும் எடுத்தனர் .இந்திய அணி சார்பில் ஜூலன் கோஸ்வாமி மற்றும் பூஜா வஸ்த்ரேகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 22 ரன்னில் ஆட்டமிழந்தார் . இதன் பிறகு ஷாஃபாலி வர்மா – யஸ்திகா பாட்டியா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர் .இதில் ஷாஃபாலி 56 ரன்களில் ஆட்டமிழக்க ,அவரைத் தொடர்ந்து யஸ்திகா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ், ரிச்சா கோஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இறுதியில் தீப்தி சர்மா – ஸ்நே ராணா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது இறுதியாக இந்திய அணி 49.5 ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது .இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.