நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி பெற்றது .
இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில்நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இன்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அமிலியா கெர் 66 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 252 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி களமிறங்கியது.இதில் ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், தீப்தி சர்மா 21 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா – ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய மிதாலி ராஜ் ,ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.இறுதியாக 46 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருந்தாலும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.