காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளார்கள். எனவே அங்கிருந்து வெளியேற நினைத்த அந்நாட்டு மக்கள், காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 183 ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதலை நடத்திய நபர் தொடர்பில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட ஒரு பத்திரிகை வெளியிட்ட தகவலின் படி, அப்துர் ரஹ்மான் அலோக்ரி என்ற நபர் தான் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இவரை, காஷ்மீர் பிரச்சினைக்காக பழிவாங்கும் நோக்கில் பசுமாடுகளை வழிபடக்கூடிய இந்து மக்களை கொல்ல இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்.
அவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, டெல்லிக்கு அடுத்து இருக்கும் பரிதாபாத்தின் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்திருக்கிறார். அப்போது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிந்த பின், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.