தட்டி கேட்ட பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சந்திரா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முனீசுவரி என்ற மகள் இருக்கின்றார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனீசுவரி கட்டனஞ்செவல் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சரண்யா, சுபா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ராம்குமாருக்கு முனீசுவரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு முனீசுவரி, இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் ராம்குமார் தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து வாழ வேண்டு என மனைவியை அழைத்துள்ளார். அதற்கு முனீசுவரி இனிமேல் உன்னுடன் வாழ முடியாது என தனது கணவரிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு நடந்து கொண்டிருக்கும்போது முனீசுவரியின் சித்தியான மாரியம்மாள் அங்கு சென்றார். இதனையடுத்து மாரியம்மாள் ஏன் இங்கு வந்து இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என்று ராம்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளின் வயிற்றுப்பகுதியில் பலமுறை குத்தியதால் மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து விட்டார்.
இதனை தடுக்க முயற்சி செய்த தனது மனைவி மற்றும் மாமியாரையும் குத்திவிட்டு ராம்குமார் கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட அங்கேயே நின்று கொண்டு இருந்தார். இதில் படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள் மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்த முனீசுவரி மற்றும் சந்திராவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக ராம்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.