சேலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கலெக்டரிடம் வழங்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கண்டித்து மாநகர தலைவர் பிரபாகர் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அதனை கலெக்டரிடம் வழங்க சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாநகர தலைவர் பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கொரோனா பெரும் தொற்றால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, தொழிலுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் ஏழை, எளிய மக்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் மத்திய அரசு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் வரை உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியதால் அதனை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை திரும்ப பெற்று ஜி.எஸ்.டி. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.