தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் முரணாக செயல்பட்டதால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி பட்டாளம்மன் கோவில் கிழக்கு தெருவில் முத்துகாமு(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மகேந்திரம் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் இணைந்து முத்துகாமுவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மகேந்திரம் உட்பட 3 பேர் மீது வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் வீரபாண்டி காவல்துறையினர் அந்த 3 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முரணாக செயல்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துகாமுவின் உறவினர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முத்துகாமுவை தாக்கிய 3 பேரையும் கைது செய்வதை உறுதியளித்துள்ளனர். இதற்குப்பின்னரே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.