திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அயனாபுரம் காலனியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(52) என்ற மனைவி உள்ளார். இவர் திருவெள்ளறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் விஜயலட்சுமி இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருவெள்ளறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் பூனாம்பாளையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் விஜயலட்சுமி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து விஜயலட்சுமி காயமடைந்தார்.
அந்த சமயம் காரில் சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காயம் அடைந்த விஜயலட்சுமியை பார்த்துள்ளார். உடனடியாக தான் வந்த காரிலேயே விஜயலட்சுமியை ஏற்றி கொண்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான டாக்டர்கள் விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் விஜயலட்சுமி தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து வந்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.