இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஓன்று தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக ஒவ்வொரு நாடும் பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி பொது முடக்கத்தில் அதிகளவு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அதிக அளவிலான தளர்வுகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் குழு இங்கிலாந்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகின்றது. அதே நேரத்தில் அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது “இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து எங்கள் நாட்டு அரசு எந்த முடிவு எடுக்கவில்லை. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து இங்கிலாந்து தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழுவின் ஆலோசனை பெற்ற பின்பு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.