பூச்சிகளை உணவாக விற்கும் நானிங் நகரத்தின் தெருவோரக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது
சீனாவின் நானிங் நகரில் இரவு நேரம் மட்டும் திறந்திருக்கும் பட்டுப்புழுக்கள் முதல் சிலந்திகள் வரை உணவாக விற்பனை செய்யும் தெருவோரக் கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 70 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்தது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவே நானிங் நகரில் இருக்கும் தெருவோரக் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வூஹான் நகரிலிருந்து நானிங் நகரம் 838 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. சீனாவின் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இந்த தெருவோரக் கடைகள் மாலை 6 மணி முதல் மறுநாள் விடியும் வரை செயல்படுவது வழக்கம். கொரோனா பரவுவதற்கு முன்னர் கூட்டம் கூட்டமாக மக்கள் குவியும் இந்நகரில் தற்போது 3000 பேரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் நானிங் நகரில் இருக்கும் மொத்த கடைகளையும் இரண்டாக பிரித்து ஒரு வாரம் ஒரு குழு எனவும் மற்றொரு வாரம் அடுத்த குழு எனவும் செயல்பட அனுமதி அளித்துள்ளனர். வியபாரிகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.