தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்கத்தினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சங்கத்தினர் இணைந்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வேலை நாட்களை அதிகரித்து 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊதிய செலவினத்தை சாதிவாரியாக பிரிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 600 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தயாளன், இந்திய மாணவர் அணி சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் கட்சி பிரமுகர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.