Categories
தேசிய செய்திகள்

காப்பீடு கோரிக்கைகள் குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் 2 மணி நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும்: ஐஆர்டிஏ

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான தொகையை வழங்குவது தொடர்பாக 2 மணி நேரத்தில் பரிசீலனை செய்து முடிக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத்தாரர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் போது காப்பீடு நிறுவனங்களின் வேலை நேரத்தில் மட்டுமே இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். அதிலும் 3ம் நபர், தரகர் நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து மருத்துவமனையிடம் விண்ணப்பங்களை சரிபார்த்து காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்கும். அதன் பிறகே காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையை மருத்துவமனைக்கு செலுத்தும்.

இதற்கு சில நாட்கள் ஆகும் நிலையில், கொரோனா சிகிச்சை பெறும் காப்பீடுதாரர்களின் விண்ணப்பங்களை வேலை நேரமின்றி 24 மணி நேரமும் பரிசீலனை செய்து இழப்பீட்டை 2 மணி நேரத்தில் முடிவு செய்ய ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான சுற்றறிக்கையில், ” கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டும், மருத்துவக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்கவும், மருத்துவக் காப்பீடு கோரிக்கைகள் குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் 2 மணி நேரத்தில் முடிவு எடுக்கவேண்டும்.

கட்டணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்து விண்ணப்பம் வழங்கப்பட்டால், விண்ணப்பம் வழங்கப்பட்ட 2 மணி நேரத்தில் அதுதொடா்பான முடிவை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கவேண்டும். இந்த விதிமுறையை மீறும் காப்பீட்டு நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |