Categories
தேசிய செய்திகள்

தீவிரமடைந்த நிசர்கா புயல்… இன்று பிற்பகல் மகாராஷ்டிரா – குஜராத் இடையே கரையை கடக்கிறது!

அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் இடையே ஆம்பன் புயல் கடந்த வாரம் தான் கரையை கடந்தது. இந்த நிலையில் நிசர்கா எனும் மற்றொரு புயல் உருவாகி மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புயலாக இந்த நிசர்கா புயல் இருக்கும், புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிசர்கா புயலானது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும், குறிப்பாக ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1891ம் ஆண்டு மகாராஷ்டிராவில் அதிதீவிர புயல் உருவான நிலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிகர்ஷா புயல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் 30க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மும்பையில் மட்டும் 20 பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு புறம் புயல் உருவாகியுள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 10,000க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலோரத்தில் உள்ள 20,000 பேர் அப்புரப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் 24 மணி நேர கட்டுப்பட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 6.5அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் பாதிப்பு குறித்து மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதல்வர்களிடையே பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசி தேவியான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |