கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் மணிகண்டன் இருவரும் வசீகரனை தீவிரமாக நடுகடலில் தேடி வந்துள்ளனர்.
ஆனால் வசீகரன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் வசீகரனின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வசீகரனை தனிப்படை அமைத்து தேடி வந்தபோது அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மீன்வளத்துறை, ஊராட்சித் துறை அதிகாரிகள் கடலோரப் பகுதியில் முகாமிட்டு தீவிரமாக வசீகரனை தேடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான மெய்யநாதன் வசீகரனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த சந்திப்பில் அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர், மணல்மேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர். அதன்பிறகு முதல்வரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் வசிகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.