திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் ஊதியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருடு போகிறது. ஒவ்வொரு தடவையும் 5 முதல் 15 ஆடுகள் வரை திருடு போகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த கவலையில் இருப்பதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஆடுகள் திருடு போவதோடு, யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது.
இதன் காரணமாக விவசாயிகள் ஆடுகளை பாதுகாப்பதற்காக நாய்களை பட்டியில் விட்டாலும் ஆடுகளுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட், சில்லி சிக்கன் ஏதாவது ஒன்றை போட்டோ அல்லது அடித்துக் கொன்று விட்டோ ஆடுகளை கடத்திச் செல்கிறார்கள். இதன் காரணமாக தற்போது சிறுகிணறு, புரங்கந்துரை, கொத்தனூர், அப்பியபாளையம், வானவராயநல்லூர் மற்றும் முதலிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்கள். அதாவது இந்த பகுதிகளில் எல்லாம் செக் போஸ்ட் அமைத்து ஊருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் இரவு நேரத்தில் சோதனைக்கு பிறகு கிராமத்தினர் அனுமதிக்கிறார்கள்.
சுழற்சி முறையில் ஒவ்வொருவரும் விழித்திருந்து இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதோடு இளைஞர்களும் பைக்கில் இரவு முழுவதும் ரோந்து செல்கிறார்கள். இவர்களுடன் காவல் துறையினரும் ரோந்து செல்கிறார்கள். இந்நிலையில் போலீசாரை போன்று பொதுமக்களை ஆங்காங்கே செக் போஸ்ட் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபடுவது போலீசாருக்கு சற்று கௌரவ குறைச்சல் ஆகவே அமைந்துள்ளது.
இதனால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சந்தைகளில் ஆடுகள் 6000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை விற்பனை போகும் நிலையில், ஆடுகள் அதிக அளவில் திருட போவதை தடுப்பதற்காக கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சி சற்று பாராட்டுக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.